
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக இரண்டு மதுபான கடைகள் இருந்தன. மேலும்,மது பிரியர்கள் குடித்துவிட்டு அரை நிர்வாண நிலையில் கிடப்பதும் அவ்வழியாக செல்லும் பெண்களை ஆபாசமாக பேசுவதும் தொடர்கதையாக இருந்தது. இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் அமைப்பினர் இதுகுறித்து அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் இரண்டு மதுக்கடைகளையும் மூடச் சொல்லி உத்தரவிட்டார். இரண்டு மதுக்கடைகளை மூடிய பிறகு தெருவுக்குத் தெரு கள்ள மது விற்பனை அதிகளவில் நடைபெற ஆரம்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்சமயம் சமூக அலுவலர்கள் பல்வேறு அரசியல் அமைப்பினர் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஸிடம் கீழக்கரை பகுதியில் நடைபெற்று வரும் கள்ள மதுவை விற்பனையை ஒழிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் கீழக்கரை எஸ்.ஐ. சல்மோன் தலைமையிலான காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் கள்ள மது விற்பனை செய்து வந்தவர்களை கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். அதன் காரணமாக தற்சமயம் ஒரு சில இடங்களை தவிர பல்வேறு இடங்களில் கள்ள மது விற்பனை நடைபெறுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கீழக்கரை எஸ்.ஐ. சல்மோன் மற்றும் காவல் துறையினருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.