
கடைக்காரர் ஒருவரிடம் இருந்து பணத்தை திருடி மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து திருடன் செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், கார்கோன் பகுதியைச் சேர்ந்தவர் ஜுஜார் போஹ்ரா. இவர் அப்பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 7ஆம் தேதி காலை தனது கடையைத் திறந்த போது அங்கு ரூ. 2.46 லட்சம் பணம் திருடப்பட்டிருப்பதை போஹ்ரா கண்டுபிடித்தார். அப்போது, திருடன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் அவர் கண்டார்.
அந்த கடிதத்தில், ‘போஹ்ரா நான் உங்கள் கடையில் இருந்து பணத்தை திருடியதற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் உங்கள் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவன். எனக்கு மிகவும் பணத்தேவை இருக்கிறது. எனக்கு நிறைய கடன் உள்ளது. நான் உங்கள் பணத்தை திருப்பித் தருகிறேன், ஆனால், அதற்கு எனக்கு சிறிது நேரம் ஆகும். 3-4 நாட்களுக்கு முன்பு நீங்கள் உங்கள் கடையில் வைத்து பணத்தை எண்ணுவதைப் பார்த்தேன். அப்போதில் இருந்தே, நான் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு பணம் கொடுத்தவர்கள் ஒவ்வொரு நாளும் என் வீட்டுக்கு வருகிறார்கள். அதனை நான் விரும்பவில்லை. அதனால், நான் உங்கள் கடையிலிருந்து பணத்தைத் திருடுகிறேன். நான் பணம் செலுத்தவில்லை என்றால் நான் சிறைக்குச் செல்வேன்.
அதனால்தான் நான் இரவில் உங்கள் கடையின் பின்புறத்தில் இருந்து வந்து பணத்தை எடுத்துக் கொள்கிறேன். கடனை அடைக்க வேண்டிய அளவுக்கு மட்டுமே நான் பணத்தை எடுத்துக் கொள்கிறேன். மீதமுள்ள பொருட்களை நான் எதுவும் செய்ய மாட்டேன். உங்கள் பணத்தை 6 மாதங்களில் திருப்பித் தந்து உங்கள் முன் வந்து சந்திப்பேன். அதுவரை, நான் கூப்பிய கைகளுடன் உங்களிடமும் உங்கள் மகனிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ராம நவமி நாளில் திருடுகிறேன்.
நீங்கள் விரும்பினால், 6 மாதங்களுக்குப் பிறகு என்னை காவல்துறையிடம் ஒப்படைக்கலாம். என்னை உங்களுக்கு நன்றாகத் தெரியும். நான் உங்கள் பணத்தைத் திருப்பித் தரும்போது, நீங்கள் எனக்குக் கொடுக்கும் எந்த தண்டனையும் நான் ஏற்றுக்கொள்வேன்’ என்று எழுதியிருந்தார். இதையடுத்து, போஹ்ரா கொடுத்த புகாரின் பேரில் பணத்தை திருடிய திருடரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.