ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (14/04/2020) காலை 10.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். நாடு முழுவதும் எத்தனை வாரம் வரை ஊரடங்கு நீட்டிப்பு என்பது குறித்து பிரதமர் மோடி அறிவிக்க வாய்ப்பு உள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நான்காவது முறையாக பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
15 மாநிலங்களில் கரோனாவின் தாக்கம் குறைந்த 25 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஏழை, எளிய மக்களுக்கான சலுகைகளும், தொழிற்துறையினருக்கான சலுகைகளும் பிரதமர் உரையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி, தெலங்கானா, மிசோரம், ஒடிஷா, அருணாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 30- ஆம் தேதி வரையும், பஞ்சாப்பில் மே 1- ஆம் தேதி வரையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.