கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அதை கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் என்பதால் அனைத்து நாடுகளும் மக்களிடம் அதையே வலியுறுத்தி வருகின்றன. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,553 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு, 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் மேலும் 466 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 4,666 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் 232 பேர் உயிரிழந்த நிலையில், 572 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.