வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ரிமால் எனப் பெயரிடப்பட்டது. இது வங்காள தேசம் மற்றும் அதையொட்டிய மேற்குவங்க மாநில கடற்கரை இடையே கடந்த 26 ஆம் தேதி (26.05.2024) நள்ளிரவில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேம்பாலங்கள் உடைந்தன. விளைநிலங்கள் வெள்ளத்தில் மிதந்தன.
இதனையடுத்து ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மழை வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களைப் பத்திரமாக வெளியேற்றுவதற்கும், உதவி பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் தற்காலிக சாலைகள், பாலங்கள் அமைத்து வருகின்றனர். அந்த வகையில் மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் ரிமால் புயலின் போது பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் போன்ற சூழ்நிலையில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் விரிவான நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த மழை வெள்ள பாதிப்பு குறித்து ராணுவ அதிகாரி அதிகாரிகள் கூறுகையில், ‘மணிப்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இன்று (30.05.2024) வரை 1500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 800 குழந்தைகள் உட்பட மொத்தம் 4000க்கும் மேற்பட்ட நபர்களை மீட்புப் படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். மீட்புப் பணிகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அவசர மற்றும் அத்தியாவசியத் தேவையை நிவர்த்தி செய்ய ஏராளமான வீடுகளுக்குச் சுத்தமான குடிநீரும் வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தனர்.