Skip to main content

"இந்த மாநிலங்களுக்கெல்லாம் குழுக்களை அனுப்புங்கள்" - அவசர கூட்டத்திற்குப் பிறகு உத்தரவிட்ட பிரதமர் மோடி!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

pm modi

 

இந்தியாவில் ஒமிக்ரான் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400- ஐ நெருங்கி வரும் நிலையில், நேற்று பிரதமர் மோடி கரோனா நிலை குறித்து அவரச ஆலோசனையை நடத்தினார். இந்த கூட்டத்தில் அதிகாரிகளிடம் பேசிய மோடி,  ஒமிக்ரான் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "புதிய திரிபு தொடர்பாக, நாம் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். கரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிவடையவில்லை, மேலும் கரோனா பாதுகாப்பு நடைமுறையை இன்றும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது முக்கியமானது" எனத் தெரிவித்துள்ளார்.

 

மாநிலங்களுடன் இணைந்து செயல்படவும், கரோனாவை கட்டுப்படுத்தும் மற்றும் கையாளும் அவற்றின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ள பிரதமர் மோடி, தொற்றுநோய்க்கு எதிரான கூட்டாக போராடும் யுக்தி அனைத்து எதிர்கால நடவடிக்கைகளையும் வழிநடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.  புதிய திரிபு ஏற்படுத்தும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட சுகாதார அமைப்புகள் மாவட்ட அளவில் இருக்க வேண்டிய அவசியத்தையும் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய  பிரதமர் மோடி, மாநிலங்களில் ஆக்சிஜன் உற்பத்தி கருவிகள் நிறுவப்பட்டு அவை முழுமையாக செயல்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

 

மேலும் கரோனா பாதிப்புகள் மாநிலங்கள், போதுமான சுகாதார உள்கட்டமைப்பு இல்லாத மாநிலங்கள், தடுப்பூசி செலுத்துதலில் பின் தங்கியிருக்கும் மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த கூட்டத்தில், தகுதியான அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்