கேரளாவில் பாஜக தொண்டர்களின் நிலை பற்றிய மோடியின் கருத்துக்கு பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்த நிலையில், அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.
இந்நிலையில் வாரணாசியில் பிரச்சாரத்தை மேற்கொண்ட மோடி பொதுமக்களிடையே பேசும்போது, "கேரளா அல்லது மேற்கு வங்கத்தில் ஒரு பாஜக தொண்டர் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது, அவர் தனது தாயிடம், இரவுக்குள் வீட்டிற்கு திரும்பவில்லை என்றால், நாளை முதல் எனது சகோதரனை கட்சி பணி செய்ய அனுப்புங்கள் என கூறிவிட்டு செல்லும் நிலை தான் உள்ளது. அந்த அளவு அங்கு பாஜக தொண்டர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது" என கூறினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், இது பற்றி கூறுகையில், "ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவரால் எப்படி இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடிந்தது. இது பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு முறையல்ல. நாட்டில் மிக அமைதியான மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் சட்டம் மற்றும் ஒழுங்கு முறையை அவமதிப்பது போல அவரது கருத்து உள்ளது. பொய்யான ஒரு கூற்றை கூறுவதற்கு முன்னாள் அங்கு உள்ள உண்மை நிலவரம் என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.