நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் (31.03.2024) எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி கொடுத்தது என்பதை புதிய உண்மைகள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியது. மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது காங்கிரஸை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்று. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவது குறித்து காங்கிரஸ் 75 ஆண்டுகளாக உழைத்து எண்ணிக்கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கச்சத்தீவு விவகாரம் குறித்த ஆங்கில நாளேட்டின் கட்டுரையை குறிப்பிட்டு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் நேற்று (01.04.2024) வெளியிட்டிருந்த பதிவில், “தமிழகத்தின் நலனைக் காக்க தி.மு.க. எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவில் வெளிவரும் புதிய விவரங்கள் தி.மு.க.வின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக அவிழ்த்துவிட்டுள்ளன. காங்கிரசும், தி.மு.க.வும் குடும்ப கட்சிகள். அவர்கள் தங்கள் சொந்த மகன்கள் மற்றும் மகள்கள் உயர வேண்டும் என்று மட்டுமே கவலைப்படுகிறார்கள். அவர்கள் வேறு யாரையும் பொருட்படுத்துவதில்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அடாவடித்தனம், குறிப்பாக நமது ஏழை மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். மேலும் கச்சத்தீவு விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசி இருந்தார்.
இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் உட்கட்டமைப்புத் துறை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கமளித்துள்ளார். அதில், “கச்சத்தீவை இந்தியா மீண்டும் மீட்பது தொடர்பாக இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் அனுப்பவில்லை. இது தொடர்பாக இந்தியாவிடம் இருந்து எந்த ஒரு கோரிக்கையும் வரவில்லை. அவ்வாறு தொடர்பு கொண்டிருந்தால் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் அதற்கு பதில் அளிக்கும். இலங்கையைப் பொறுத்தவரை கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.