இந்தியாவில் கரோனா பரவல் சில மாநிலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் ஒமிக்ரான் பாதிப்பு நாட்டில் அதிகரித்து வருவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், ஜனவரி 10 முதல் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், இணை நோயுள்ளவர்களும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள எந்த மருத்துவ சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை என அறிவித்துள்ளது. அதேநேரத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், இணை நோயுள்ளவர்களும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளவது தொடர்பாக தங்களது மருத்துவர்களிடம் அறிவுரை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் 15-18 வயதினர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம் என்றும், நேரடியாக தடுப்பூசி மையத்திற்கு சென்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.