இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளன. டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை பற்றி தெரிவிப்பதும், ஆக்ஸிஜன் முழுவதுமாக தீர்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், புதிய நோயாளிகளை அனுமதிக்க மறுத்து வருகின்றன.
இந்தநிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் உயிரிழந்துவிட்டதாக டெல்லியிலுள்ள ஜெய்ப்பூர் கோல்டன் ஹாஸ்ப்பிட்டல் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அம்மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் டி.கே. பலூஜா, "கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட இருபது நோயாளிகள், ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நேற்று (23.04.2021) இரவு உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் இருப்பு முழுவதுமாக தீரவில்லை. ஆனால் இருப்பு குறைந்துகொண்டே வந்ததால் அழுத்தம் குறைந்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் இன்னும் 210க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருப்பதாகவும், மருத்துவமனையில் 45 நிமிடத்திற்கான ஆக்ஸிஜன் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், 3,600 லிட்டர் ஆக்ஸிஜன் நேற்று மாலை 5 மணிக்கு எங்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இரவு 12 மணிக்கு 1,500 லிட்டர் ஆக்ஸிஜன்தான் கிடைத்தது. 7 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஆக்ஸிஜன் விநியோகத்தில் அழுத்தம் குறைவாக இருந்தது. ஆக்ஸிஜன் நிரப்பும்போதும், அழுத்தம் அதிகரிக்க நேரம் எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.