சமூகவலைதளங்கள் மற்றும் ஓ.டி.டிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில், மத்திய அரசு புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தது. இந்த விதிகளை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனாலும் வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்ட ஒரு விதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல் ட்விட்டரும் புதிய விதிகளுக்கு இன்னும் முழுமையாக இணங்கவில்லை.
இதனையடுத்து, புதிய விதிகளுக்கு இணங்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதி அறிவிப்பை வழங்கியுள்ளது. இந்தநிலையில், தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு, வரும் 18ஆம் தேதி ஆஜராகுமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல். சமூக வலைதளங்கள் /ஆன்லைன் செய்தி ஊடக தளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது, டிஜிட்டலில் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ட்விட்டர் நிறுவன பிரதிநிதிகளின் கருத்தைக் கேட்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.