கடந்த இரண்டு வருடங்களாகவே உலக அளவில் மிகப் பெரும் பேசுபொருளாக இருக்கிறது கரோனா. தற்போது வரை உலக நாடுகள் கரோனா பாதிப்புக்கு எதிராகத் தடுப்பூசிகளை செலுத்தி போராடிவருகிறது. தற்போது புதிதாக 'ஒமிக்ரான்' என்ற வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
'ஒமிக்ரான்' தொற்று பாதிப்பு காரணமாக மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 35 பேருக்கு 'ஒமிக்ரான்' கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில்தான் 'ஒமிக்ரான்' பாதிப்பு என்பது மிகவும் அதிகமாக உள்ளது. இதுவரை 17 பேருக்கு அங்கு 'ஒமிக்ரான்' உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் ஒருவருக்கு 'ஒமைக்ரான்' தொற்று ஏற்பட்டதாகவும் பின்னர் அவர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து விட்டதாகவும் ஆந்திர சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அயர்லாந்திலிருந்து மும்பை வழியாக விசாகப்பட்டினம் வந்த 34 வயது நபருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.