
தோஹாவிலிருந்து ஹைதரபாத் வந்த விமானத்தில் பயணம் செய்த 11மாத பச்சிளம் குழந்தை மூச்சித்திணறல் ஏற்பட்டு இறந்த சம்பவம் பயணிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கத்தார் நாட்டில் இருந்து ஹைதரபாத்துக்கு அர்னவ் வர்மா என்பவர் குடும்பத்துடன் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். விமானம் தரை இறங்கும் நிலையில் இருந்தபோது அர்னவின் 11 மாத குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக விமானத்தில் இருப்பவர்களை அழைத்து முதலுதவி செய்தனர். உடனடியாக ஹைதரபாத் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஹைதரபாத் விமான நிலையத்தில் இருக்கும் உள் மருத்துவமனையில் மருத்துவர்களை தயார் நிலையில் வைத்தனர். விமானம் தரையிறங்கியதும் அழைத்து செல்வதற்காக ஆம்புலன்ஸும் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.
தரையிறங்கியதும் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்ட குழந்தையை சிகிச்சை செய்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த துயர் செய்தியை கேள்விப்பட்ட அக்குழந்தையின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இவ்வளவு முன் ஏற்பாடுகள் செய்தும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லையே என்று விமான ஊழியர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.