மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் இருவருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரசால், சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,000-ஐ கடந்துள்ளது.மேலும், 3,02,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000-ஐ கடந்துள்ளது.நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர்.மேலும், 326 பேர் வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு குணமாகியுள்ளனர்.இந்நிலையில் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மஹாராஷ்ட்ராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது.
இந்தச் சூழலில், அம்மாநிலத்தின் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் ஒன்றான தாராவி பகுதியில் புதிதாக இருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.ஏற்கனவே தாராவி பகுதியில் ஏழு பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.மக்கள் நெருக்கம் மிக அதிகமாக உள்ள தாராவியில் கரோனா தொற்று அடுத்தடுத்து கண்டறியப்பட்டு வருவது மஹாராஷ்ட்ராவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.