திமுக மகளிர் அணி மற்றும் கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், திராவிட இயக்க வரலாற்றையும் கொள்கைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி முன்னெடுப்பில் நடைபெறும் ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி நவம்பர் 22, 23ஆம் தேதிகளில் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார். இந்த வினாடி வினா இறுதிப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். இதில், கனிமொழி எம்.பி., அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இப்போட்டியில், திமுக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன் தொடக்கவுரையாற்றுகிறார், திமுக மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன் வரவேற்புரையாற்றுகிறார் மற்றும் திமுக மகளிர் தொண்டரணிச் செயலாளர் நாமக்கல் ராணி நன்றியுரை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியை திமுக தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி.லெனின் தொகுத்து வழங்குகிறார்.
தொடர்ந்து, இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா ரூ. 10 லட்சமும், 2ஆம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.6 லட்சமும், 3ஆம் இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3 லட்சமும் ரொக்கப் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
இந்த வினாடி வினா போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தின் வாயிலாக தொடங்கி வைத்தார். இதில் முதல் சுற்றுப் போட்டிகள் இணையதளச் சுற்றில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் பங்கேற்றனர். தமிழ் மொழி வளர்ச்சி, இலக்கியம், திராவிட வரலாறு, தமிழ்நாட்டின் வரலாறு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்களின் பங்களிப்புகளை உள்ளடக்கிய வினாக்களுடன் 18 வயதுக்குப்பட்டோர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோர் என இரு பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு அணியும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டது.
தமிழ்நாடு, பாண்டிச்சேரி உட்பட மண்டல அளவிலான போட்டிகளில் மொத்தம் 234 அணிகள் பங்கேற்றன. தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தருமபுரி, ராணிப்பேட்டை, ஈரோடு, காஞ்சிபுரம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் மண்டலச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த மண்டல சுற்றுகளில் வெற்றிபெற்ற 24 அணிகள் அரையிறுதி போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
கலைஞர் 100 வினாடி-வினா போட்டியைப் போலத் தமிழ்நாட்டில் எந்த கட்சியும், 18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டியை நடத்தியதில்லை. இதன் மூலம் அனைத்து வயது தரப்பினரும் போட்டிகளில் பங்கேற்க வகைசெய்தது. மேலும், மண்டல அளவில் போட்டிகள் 12 மாவட்டத்தில் நடைபெற்றது, இந்த இடங்கள் அனைத்திற்கும் கனிமொழி நேரடியாகச் சென்று போட்டியைப் பார்வையிட்டு வெற்றியாளர்களை வாழ்த்தி பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்த போட்டியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் கனிமொழி எம்.பி பாராட்டி வாழ்த்தியது அவர்களாலும் பெரும் உத்வேகமாக இருந்தது.
கலைஞரின் இலக்கிய வாரிசாக இருந்த கனிமொழி 2007-ஆம் ஆண்டு முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். கலைஞரின் மகள், மு.க.ஸ்டாலினின் தங்கை என்ற அடையாளத்தைத் தாண்டி கவிஞர், அரசியல்வாதி, ஆங்கிலப்புலமை கொண்ட ஆளுமை, பெண்ணியவாதி என பல்வேறு விஷயங்களைத் தாண்டி, கலைஞரின் திராவிட அரசியல் வாரிசாகக் கலைஞர் 100 வினாடி-வினா போட்டியின் மூலம் பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.