காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருக்கும் தனது மனைவி தனது புகைப்படங்களை அரசியல் விளம்பரங்களில் பயன்படுத்துவதை நிறுத்தாவிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் எம்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், பாலாகாட் மக்களவை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவருமானவர் கான்கர் முஞ்சாரே. கடந்த ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், கான்கர் முஞ்சாரேவின் மனைவி அனுபா முஞ்சாரே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மனைவி காங்கிரஸ் கட்சியிலும், கணவர் பகுஜன் சமாஜ் கட்சியிலும் இருப்பதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பாலாகாட் மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக கான்கர் முஞ்சாரே போட்டியிட்டார். இந்த தேர்தலின் போது, அரசியல் கொள்கை முரண்பாடுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது மனைவியான காங்கிரஸ் எம்.எல்.ஏ அனுபா முஞ்சாரேவை தனது வீட்டை விட்டு வெளியேறுமாறு கான்கர் கூறியிருந்தார். தற்போது இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ அனுபா முஞ்சாரேவின் பிறந்தநாள் விழா நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை கொண்டாடும் விதமாக, அவருக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டது. அந்த பேனரில், அனுபா தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இதற்கு முன்னாள் எம்.பியான கான்கா முஞ்சாரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “எம்.எல்.ஏ.வான அனுபா முஞ்சாரே எனது அனுமதியின்றி எனது புகைப்படத்தை பயன்படுத்தியிருப்பது பொறுப்பற்ற அணுகுமுறையாகும். இது எனக்கு அவமானம். அவர் தனது எல்லைக்குள் இருக்க வேண்டும். மேலும் அவர் தனது சொந்த கட்சித் தலைவர்களின் படங்களை பயன்படுத்த வேண்டும்.
நான் வேறு கட்சியில், அவர் வேறு கட்சியில் இருக்கிறார். எனது புகைப்படங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? அவருடைய எந்த நிகழ்ச்சியிலும் என் பெயர் இடம்பெறக்கூடாது. எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஆட்சேபனைக்குரியது. நான் வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்த முறை நான் அவரை விட்டுவிடுகிறேன். அவர் மீண்டும் இதுபோன்ற செயலை செய்யக்கூடாது” என்று கூறினார்.