ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திருப்பதி கோவிலில் பணிபுரியும் இந்து அல்லாத பிற மதத்தவர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து பி.ஆர்.நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “திருப்பதி கோவில் நிர்வாகத்தில் எத்தனை இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளனர் என்பதை மதிப்பீடு செய்து அவர்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள். திருமலையில் பணிபுரியும் இந்துக்கள் அல்லாதவர்கள் குறித்து உரிய முடிவு எடுக்குமாறு மாநில அரசுக்கு கடிதம் எழுதுவோம். திருப்பதி தேவஸ்தானம் ஒரு இந்து மத நிறுவனம். கோவிலில் பணிபுரிய இந்துக்கள் அல்லாதவர்களை பணியமர்த்தக்கூடாது என்று வாரியம் கருதுகிறது. கோவிலில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அவர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்வோம்” என்று கூறினார்.
இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் எடுத்த இந்த முடிவுக்கு தான் வரவேற்பதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய சுற்றுலா கலாச்சாரம் மற்றும் கிழக்கு பிராந்திய வளர்ச்சி துறை அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் முடிவை நான் வரவேற்கிறேன். சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான முதல் முயற்சியாக, வெங்கடேஸ்வர சுவாமிக்கு அருகில் பணிபுரிபவர்கள் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று வாரியம் முடிவு செய்துள்ளது. இந்துக்கள் அல்லாதவர்கள் இருக்கக் கூடாது.
பல ஆண்டுகளாக இந்துக்கள் அல்லாதோர் பணிபுரிந்து வரும் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில், இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. இறைவனை நம்புபவர்கள் மற்றும் இந்து சமூகத்தில் ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே வெங்கடேஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம். இந்தியா முழுவதும் இது நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்து சமூகத்தினராக இருந்தாலும் சரி, வேறு எந்த சமூகத்தினரின் வழிபாட்டுத்தலமாக இருந்தாலும் சரி, அவர்களின் நம்பிக்கையில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே அந்த வளாகத்தில் பணிபுரிய வேண்டும். அத்தகைய முடிவு எல்லா இடங்களிலும் எடுக்கப்பட வேண்டும். திருப்பதி தேவஸ்தானம் எடுத்த முடிவை அனைத்து கோவில்களிலும் மற்ற வழிபாட்டுத் தலங்களிலும் அமல்படுத்த வேண்டும்” என்று கூறினார்.