உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநிலத்தின் பஸ்தி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று (21.10.2021) கலந்துகொண்டார். இந்தநிலையில், அந்த நிகழ்ச்சிக்கு யோகி ஆதித்யநாத் வருகை தருவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு, நிகழ்ச்சி அரங்கிற்குள் உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் ஒரு நபர் இருப்பதைப் போலீஸ் அதிகாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து துப்பாக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்துவருகின்றனர். மேலும், துப்பாக்கி வைத்திருந்த நபர் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் இந்தப் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், ஏழு போலீஸ் அதிகாரிகள் பணியில் அலட்சியமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் மற்ற மூன்று அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட எஸ்.பி.களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி அரங்கிற்குள் துப்பாக்கியுடன் ஒருவர் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.