தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (21.11.2024) வெளியிடப்பட்டிருந்த வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், ‘தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய சூழலில் தான் சென்னையில் இருந்து இன்று (21.11.2024) காலை 6 மணியளவில் தூத்துக்குடிக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட 77 பயணிகள் பயணம் செய்தனர். அதே சமயம் தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் அதிக மேகமூட்டம் காரணமாக ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக விமானம் வானில் வட்டமடித்துக் கொண்டே இருந்தது.
இருப்பினும் தொடர்ந்து அங்கு நிலவி வந்த மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதன் காரணமாக சுமார் 8 மணி அளவில் மதுரை விமானத்தில் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட 77 பயணிகளும் மதுரை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊர்ளுக்கு கார் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.