மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு இன்று (20.11.2024) நடைபெற்றது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. அதே போல், ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலோடு, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கேரளா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்த நிலையில், வாக்குச்சாவடியிலேயே வேட்பாளர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் பகுதியைச் சேர்ந்தவர் பாலாசாகேப் ஷிண்டே. இவர் பீட் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இன்று நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க பீட் பகுதியில் உள்ள சத்ரபதி ஷாஹு வித்யாலயா வாக்குப்பதிவு மையத்தில் பாலாசாகேப் ஷிண்டே காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பாலாசாகேப் ஷிண்டேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.