இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. தமிழகத்தில் மக்கள் தொடர்ந்து நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு நிரந்தர நீட் விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.
இதனை அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டது. ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் படி சட்டமன்றத்தில் விவாதித்தது. முடிவில் சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு விலக்கு கோரி மசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பியுள்ளது. அது மட்டும் இன்றி சட்ட ரீதியாக விலக்கு பெறவும் போராடி வருகிறது.
இந்நிலையில் 2020ம் ஆண்டு தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த ரிட் மனு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் தக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறித்தான புள்ளி விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சுதான்ஸ் தூலியா விசாரித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்றும் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நீட் தேர்வினை கட்டாயமாக்கிய சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஜய்ரோஸ்கி மற்றும் சி.டி. ரவிக்குமார் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வர இருந்தது.
வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே தமிழக அர்சு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டு இருந்தது. அக்கடிதத்தில் நீட் தேர்வு தொடர்பான ரிட் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நீட் விலக்கு கோரிய மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பரிசீலனையில் இருப்பதால் இவ்வழக்கை 12 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்த நிலையில் 12 வாரங்களுக்கு வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.