மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் மோடியின் தேர்தல் பிரச்சாரங்களை ஒளிபரப்புவதற்காக நமோ டிவி என்ற தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டது. இதில் 24 மணி நேரமும் பிரதமர் மோடியின் பிரச்சார உரைகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் போது இதற்கான உரிமம் எப்படி வழங்கப்பட்டது என காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மீ கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன.
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம், நமோ டி.வி.க்கு அனுமதி அளித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளித்துள்ள தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், நமோ டிவி உரிமம் பெற்ற ஒரு தொலைக்காட்சி அல்ல என்றும், அது வெறும் டிடிஎச் விளம்பர தளம் மட்டுமே எனவும் கூறியுள்ளது.