பா.ஜ.க மூத்த தலைவரான எடியூரப்பா, கர்நாடகா மாநிலத்தின், முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது கடந்த மார்ச் 15ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல்நிலையத்தில், எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவரான எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே, எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்பட்டு அவர் மீது போக்சோ வழக்குப் தொடர்ந்த 17 வயது சிறுமியின் தாயாரான 54 வயது பெண் கடந்த மே மாதம் 26ஆம் தேதி திடீரென்று நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தார். பா.ஜ.க மூத்த தலைவர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர்ந்த பெண் உயிரிழந்திருப்பது குறித்து சதாசிவ நகர் போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ஜூன் 17 ஆம் தேதி சிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜராவதாக எடியூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்ய சி.ஐ.டி வாரண்ட் பிறப்பித்தது. இதனால், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனையடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவால் (சி.ஐ.டி) விசாரிக்கப்பட்டு வரும் புகாரை ரத்து செய்யக் கோரி முன்னாள் முதல்வர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘அவர் முன்னாள் மாநில முதல்வர். அவர் நாட்டை விட்டா ஓடிவிடுவார்? பெங்களூரில் இருந்து டெல்லிக்கு கிளம்பி அவரால் என்ன செய்ய முடியும்? உடல் நலக்குறைவு உள்ள மனுதாரரான முன்னாள் முதல்வரை கைது செய்து காவலில் வைக்கும் முடிவுக்கு நாம் உடனடியாகச் உத்தரவிட முடியாது. அதனால், ஜூன் 17ஆம் தேதி அன்று அடுத்த விசாரணை நடைபெறும். அதுவரை அவரை கைது செய்ய முடியாது’ என்று கூறி எடியூரப்பா கைதுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.