சீனா, அமெரிக்கா இடையே நடக்கும் வர்த்தக போர் காரணமாக ஒரே நாளில் உலக கோடீஸ்வரர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்துள்ளனர்.
சீனா மற்றும் அமெரிக்கா இடையே கடந்த சில வருடங்களாக கடுமையான வர்த்தக போர் நிலவி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இரு நாடுகளும் மாறி மாறி இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிப்புகளை செய்து வருகிறது. இந்த வர்த்தக போர் கடந்த செவ்வாய்கிழமை உச்சகட்டத்தை அடைந்த நிலையில், அமெரிக்க பங்கு சந்தை மற்றும் வணிகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் அமெரிக்க சந்தைகள் மற்றும் வணிகங்களில் முதலீடு செய்திருந்த தொழிலதிபர்களின் பணம் பெருமளவு நஷ்டமடைந்து.
இதில் இந்திய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்கு 2.45 பில்லியன் டாலர் அளவு இழப்பு ஏற்பட்டது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 1,73,51,39,00,000 ரூபாய் ஆகும். இதே போல அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 3.43 பில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்தார். பிரான்சின் எல்விஎம்ஹெச் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 3.25 பில்லியன் டாலர்களை இழந்தார். பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 2.80 பில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்தார்.
அந்த ஒரு தினத்தில் மட்டும் மொத்தம் 117 பில்லியன் டாலர்களை உலகில் உள்ள தொழிலதிபர்கள் இழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 21 பேர் 1 பில்லியன் டாலர்களுக்கு (7000 கோடி ரூபாய்) மேல் நஷ்டமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.