இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின. குறிப்பாக, அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
அதேபோல், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை வாங்கவும், பயன்படுத்தவும் தொடங்கியுள்ளன. அதன்படி, 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு பிராண்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் இந்த அளவுக்கு வரவேற்பு கிட்டியது இல்லை என்று கூறும் அளவுக்கு ஓலாவுக்கு ஆதரவு பெருகியுள்ளது.
முன்னதாக அந்நிறுவனம், வெறும் 499 ரூபாய் செலுத்தினால் ஸ்கூட்டரை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்படும். இந்த 499 ரூபாய் கூட திருப்பி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறுத்து ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்குக் கிடைத்த வரவேற்பு எனக்குப் பெரு மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா முழுவதும் இருந்து வாடிக்கையாளர்கள் பெரும் ஆதரவு கொடுத்துள்ளனர். இது இந்திய மக்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து தங்களின் கவனத்தை இ- ஸ்கூட்டர்கள் பக்கம் திருப்புகின்றனர் என்பதையே காட்டியுள்ளது. உலகம் முழுவதும் இ- ஸ்கூட்டர்களின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில் ஓலா இ- ஸ்கூட்டருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது ஓலா ஸ்கூட்டர்களை முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு ஸ்கூட்டர் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்" என்றார்.
முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் இந்த ஸ்கூட்டர் பூஜ்ஜியத்தில் இருந்து 50% சார்ஜ் ஆவதற்கு வெறும் 18 நிமிடங்களே ஆகும். அதன் மூலம் 75 கிலோ மீட்டர் பயணிக்க முடியும். முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இதனிடையே, தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கரில் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையை ஓலா நிறுவனம் அமைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
"மின்சார வாகனத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் வரிச்சலுகை, மானியம் போன்ற பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதால், எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வும் பொதுமக்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கத் தூண்டுவதற்கு ஒரு காரணம். பெட்ரோலில் இரு சக்கர வாகனத்தின் விலையை விட எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை கூடுதலாக இருந்தாலும், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை நன்மைகளை இ- ஸ்கூட்டர் மூலம் நாம் பெற முடியும்" என்று கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.