நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாக நான் பார்க்கவில்லை, டாலரின் மதிப்பு உயர்வதாகவே நான் பார்க்கிறேன் எனக் கூறியது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது நிருபர் ஒருவர், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது குறித்து கேள்வி எழுப்ப, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நொடிகள் அமைதி காத்து சிந்தித்து, "டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாக நான் பார்க்கவில்லை, டாலரின் மதிப்பு உயர்வதாகவே பார்க்கிறேன். அமெரிக்காவின் டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் பணத்தின் மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நாணய சந்தையில் வளர்ந்து வரும் நாடுகளின் நாணயத்தின் மதிப்பை விட இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வாகவே உள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் நிதி அமைச்சரின் பதில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளானதோடு, இணையதள வாசிகள் பலர் அதனை விமர்சித்தும் வருகின்றனர். அந்த வகையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில், ”நாங்கள் விழவில்லை பள்ளத்துக்குள் இருக்கிறோம். நாங்கள் பட்டினியாக இல்லை சாப்பிடாமல் இருக்கிறோம். விலை ஏறவில்லை நாங்கள் அதிகமாக கொடுத்து வாங்குகிறோம். ரூபாய் இறங்கவில்லை டாலர்தான் ஏறி ஒய்யாரம் காட்டுகிறது. இவ்வளவையும் புரிந்துகொண்டால் நீங்கள் இந்திய பொருளாதாரத்தின் புலி” என கடுமையாக விமர்சித்துள்ளார்.