Skip to main content

உரத்த குரலில் தமிழ்நாடு; ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி!

Published on 10/05/2025 | Edited on 10/05/2025

 

Rally led by Chief Minister M.K. Stalin in support of the army chennai

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம்  நடத்தி வரும் தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்து வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதால், போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. 

இத்தகைய சூழலில் தான் பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் பேரணி நடைபெறும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

இந்த நிலையில், இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (10-05-25) சென்னையில் பேரணி நடைபெற்றது. காவல்துறை இயக்குநர் அலுவலகம் அருகில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை நடைபெற்ற இந்த பேரணியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற எம்.பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களானவைகோ, முத்தரசன், செல்வப்பெருந்தகை, உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 

பேரணியில் பங்கேற்போர் வசதிக்காக 10 இடங்களில் மருத்துவ முகாம், 200 இடங்களில் நிழற்கூடாரங்கள், 30 இடங்களில் குடிநீர் தொட்டிகள், 50 இடங்களில் கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “நாட்டு தேசப்பற்றில் எப்போதும் முதன்மையாக இருப்பது தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் தான். அதே போல மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியும் தமிழ்நாடு தான். இந்திய ராணுவத்திற்கு நாம் செய்யக்கூடிய நன்றியாக இந்த பேரணி நடைபெறுகிறது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்