
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். கடந்த 2014- ஆம் ஆண்டு செப்டம்பர் 25- ஆம் தேதி அன்று ஐந்து நாள் அரசுமுறை பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தின் போது, ஐ.நா. பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். அதேபோல், 2015- ஆம் ஆண்டு செப்டம்பர் 23- ஆம் தேதியும் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்ற பிரதமர், கூகுள் உள்ளிட்ட முக்கிய தொழில் நிறுவனங்கள் இயங்கும் சிலிக்கான்வேலிக்கு சென்றிருந்தார்.
அதைத் தொடர்ந்து, 2016- ஆம் ஆண்டு மார்ச் 30- ஆம் தேதி அன்று சர்வதேச அணு பாதுகாப்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்காவும், 2016- ஆம் ஆண்டு ஜூன் 4- ஆம் தேதி அன்று இரு தரப்பு பேச்சுவார்த்தைக்காகவும் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தார்.
2017- ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர், அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்கா செல்லவில்லை. கடைசியாக, 2019- ஆம் ஆண்டு செப்டம்பர் 21- ஆம் தேதி அன்று எட்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்திலும் ஹவுடி மோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது பதவிக் காலத்தில் அமெரிக்காவுக்குத் தான் அதிகமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போதைய பயணத்துடன் சேர்த்து இதுவரை ஏழுமுறை பிரதமர் அமெரிக்கா சென்றுள்ளார். சீனா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு தலா ஐந்து முறையும், ஜெர்மனி, ஜப்பான், நேபாளம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு தலா நான்கு முறையும், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகத்துக்குத் தலா மூன்று முறையும் சென்றுள்ளார்.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், பிரேசில், பிரிட்டன், தென் கொரியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு தலா இரண்டு முறையும், அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, கனடா, இந்தோனேசியா, ஸ்பெயின், ஸ்வீடன், உகாண்டா, வியட்நாம் உள்ளிட்ட 34 நாடுகளுக்கு தலா ஒருமுறையும் பயணம் மேற்கொண்டுள்ளார்.