மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் கூட்டணி ஆட்சியைக் கலைக்கும் முயற்சியாக 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், இரண்டு பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள், ஒரு சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ மற்றும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ ஆகிய 8 எம்.எல்.ஏ.க்களை பாஜக சொகுசு விடுதியில் தங்கவைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் தங்களது ஆட்சியை கலைக்க பாஜக தொடர்ந்து முயற்சித்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக தலைவர்கள் பெரும் தொகையை காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தருவதாக பேரம் பேசி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டி இருந்தார். இதனையடுத்து மாநில அரசைக் கவிழ்க்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக மத்தியப்பிரதேச பாஜக தலைவர்கள் எட்டு காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்களை ஹரியானாவில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றதாக காங்கிரஸ் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் விடுதியிலிருந்த்து மீட்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய மத்தியப் பிரதேச காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் ஷோபா ஓஜா, "மாநில அரசைக் கலைக்கும் நோக்கத்துடன் மனேசார் விடுதியில் 8 எம்.எல்.ஏ.க்களைக் கடத்தி வைத்திருந்தனர். அதில் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மீட்டு ஆட்சிக்கலைப்பு முயற்சியை முறியடித்துள்ளோம். மேலும், பகுஜன் சமாஜ் உறுப்பினர் ராம்பாயையும் மீட்டுள்ளோம். மீதமுள்ள எம்.எல்.ஏ.க்களை பாஜக கர்நாடாகாவுக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது" என தெரிவித்துள்ளார்.