கேரளாவில் ஆளும் முன்னணியைச் சேர்ந்த நீலாம்பூர் சட்டமன்ற உறுப்பினரான பி.வி. அன்வருக்கும், பத்தினம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்த உரையாடலில் ஏடிஜிபி மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இந்த உரையாடல் வெளியான மறுநாள் ஏடிஜிபி மீது, பி.வி. அன்வர் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைத்திருந்தார்.
அதில், “துபாயில் தங்கம் கடத்தும் கும்பலுக்கும் ஏடிஜிபிக்கு தொடர்பு இருக்கிறது. கடத்தல்காரர்களின் தகவலின் பெயரில் கருப்பூர் விமான நிலையத்திலிருந்து தங்கத்தைக் கைப்பற்றி உள்ளனர்” எனக் கூறியிருந்தார். இந்த விவகாரம் கேரள அரசியல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், அரசு மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை வைப்பது ஆளும் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் அரசுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் எம்.எல்.ஏ பி.வி.அன்வர் எழுப்பிய குற்றச்சாட்டிற்குப் பொறுப்பேற்று முதல்வர் பினராய் விஜயன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திருவனந்தபுரம் தலைமைச்செயலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசாருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மேலும் பேரணி நடத்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும், கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியும் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.