பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் மாநில முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேவ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஆளுநரிடம் வழங்கினார்.
சர்ச்சை பேச்சு, சர்ச்சைக்குரிய முடிவுகள் என பிப்லப் குமார் தேவ் மீது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருந்ததாகவும், இதைத் தொடர்ந்து கட்சி மேலிடம் அளித்த அறிவுறுத்தல்களின் படி, அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.
ஜிம் பயிற்சியாளராக இருந்த பிப்லப் குமார் தேவ், பா.ஜ.க.வில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார், திரிபுரா மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட பிப்லப் குமார் தேவ், சில ஆண்டுகள் டெல்லியில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜினாமாவைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்-ஐ மேலிடப் பார்வையாளராக திரிபுராவுக்கு அனுப்பிய கட்சித் தலைமை உடனடியாக, புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கான பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (14/05/2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய முதலமைச்சராக பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மாணிக் சாஹா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிப்லப் குமார் தேவ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனார்.
அதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு செல்லும் டாக்டர் மாணிக் சாஹா அம்மாநில ஆளுநரை நேரில் சந்தித்து, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமைக் கோருகிறார்.