மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கும்பல் தங்களது நிலத்தைப் பலவந்தமாக கைப்பற்றியதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் அந்தப் பகுதியில் வாழும் பெண்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், ஷேக் ஷாஜகான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏராளமான பெண்கள் கடந்த சில மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஷேக் ஷாஜகானின் உதவியாளர் ஷிபோ பிரசாத் ஹஸ்ராவின் வீட்டை அங்குள்ள உள்ளூர் மக்கள் அடித்து நொறுக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த தொடர் போராட்டம் வலுத்ததால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மேற்கு வங்க சட்டப்பேரவையில், ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்ட 6 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்டு செய்தனர். இதனையடுத்து, மேற்கு வங்க மாநிலத் தலைவர் சுகந்த மஜும்தார் உட்பட பா.ஜ.க.வினர், ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், சந்தேஷ்காலி போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் இன்று (15-02-24) மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர், “நான் ஒருபோதும் அநீதியை அனுமதிக்க மாட்டேன். மாநில ஆணையத்தையும், நிர்வாகத்தையும் அங்கு அனுப்பினேன். இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எங்கள் மகளிர் அணியினர் அங்கு உள்ளனர். மக்களில் குறைகளை கேட்டறிவதற்காக மகளிர் போலீஸ் குழுவினர் ஒவ்வொரு வீட்டிற்கு சென்று வருகின்றனர். புகாரளிக்கப்படும் பிரச்சனைகளை நாங்கள் நிச்சயமாக தீர்ப்போம். அதில் நடவடிக்கை எடுக்க எனக்கு விஷயம் தெரிய வேண்டும்” என்று கூறினார்.