மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பல்வேறு குழப்பங்களுக்கு பிறகு, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது.
கடந்த நவம்பர் மாதம் 28- ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டதுடன், 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதன்பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 30- ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
இதில் துணை முதல்வராக அஜித்பவார் மீண்டும் பதவியேற்றார். விதான் பவன் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (05.01.2020) மகாராஷ்டிர மாநில அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுநிர்வாகம், தொழில் நுட்பம், சட்டம் உள்ளிட்ட துறைகள் முதல்வர் உத்தவ் தாக்கரே வசம் இருக்கும். முதல்வர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் அஜித் பாவருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறையும், அமைச்சர் அசோக் சவானுக்கு பொதுப்பணித்துறையும், அமைச்சர் ஜெயந்த் பாட்டீலுக்கு நீர்வளத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமைச்சர் சாஜன்புஜ்பாலுக்கு உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம், அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு சிறுபான்மையினர் நலத்துறை, அமைச்சர் பாலாசாகேப் தரோட்டுக்கு வருவாய்த்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.