ஆக்ஸ்ஃபோர்ட், அஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தான 'கோவிஷீல்ட்' மருந்தின் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதல் இரு கட்டங்களை இத்தடுப்பூசி ஆய்வுகள் வெற்றிகரமாகக் கடந்துவிட்டன. அதனையடுத்து உலக அளவில் துறைசார் வல்லுநர்களால் இத்தடுப்பூசி ஆய்வுகள் உற்றுக் கவனிக்கப்பட்டன. விரைவில் பயன்பாட்டிற்கு வரக் கூடிய தடுப்பூசிகளுக்கான பட்டியலில் இந்தத் தடுப்பூசியும் முக்கிய இடம் வகித்தது. இந்நிலையில் தடுப்பு மருந்தைத் தன்னார்வலர் ஒருவருக்குச் செலுத்தி சோதனை செய்யும் போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து இந்த ஆய்வுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, இந்தியாவில் கோவிஷீல்ட் மருந்தின் 2-ஆவது கட்டம் மற்றும் 3-ஆவது கட்ட பரிசோதனையை மேற்கொண்டு வந்த செரம் மருந்து நிறுவனத்தை உடனடியாக ஆராய்ச்சிகளை நிறுத்தக்கூறியது இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம். இந்நிலையில், கோவிஷீல்ட் மருந்தின் பரிசோதனை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மருந்து பாதுகாப்பானது எனத் தெரியவந்ததையடுத்து, மீண்டும் பரிசோதனையைத் தொடங்க பிரிட்டன் மருந்துக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் ஆக்ஸ்ஃபோர்ட் ஆராய்ச்சிக் குழுவிற்கு அனுமதியளித்தது. இதனைத்தொடர்ந்து, தற்போது கோவிஷீல்ட் மருந்தின் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம், செரம் மருந்து நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.