வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் 100 நாட்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், உத்தரப்பிரதேசத்திற்கு வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்தனர்.
இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஹரியானா முதல்வர், "பாஜக விவசாய பிரிவினர் 1000 பேர் கொண்ட ஒரு குழுவை அமையுங்கள். போராடும் விவசாயிகளுக்கு எதிராக நீங்களும் பழிவாங்கும் செயலை செய்யுங்கள். தடி எடுத்து தயாராக இருங்கள். சிறை சென்றாலும் வரலாற்றில் நிலை பெறுவீர்கள்" என்றார். இவரின் இந்த அராஜக பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.