குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குரூப் கேப்டன் வருண் சிங் தனது பள்ளிக் கூடத்திற்கு எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள், விமானப்படை அதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்த நிலையில், உயிருடன் மீட்கப்பட்டு தற்போது பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குரூப் கேப்டன் வருண் சிங் தனது பள்ளிக்கூடத்திற்கு எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவின் மூன்றாவது மிக உயரிய விருதான சவுர்ய சக்கரா விருது பெற்ற கையோடு கடந்த செப்டம்பர் மாதம் 18- ஆம் தேதி அன்று அவர் தனது பள்ளிக்கு கடிதம் எழுதினார். ஹரியானா மாநிலத்தில் உள்ள சண்டிமந்திர் ராணுவ பள்ளியின் முன்னாள் மாணவரான வருண் சிங், தனது பள்ளி முதல்வருக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த கடிதத்தை எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், "உங்களின் 12- ஆம் வகுப்பு மதிப்பெண் தான் உங்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்ற எண்ணத்தைத் தவிருங்கள். உங்கள் மீது நம்பிக்கைக் கொண்டு, உங்களுக்குப் பிடித்த துறையில் ஈர்ப்பு கொண்டு, அர்ப்பணிப்புடன் பணி செய்தாலே போதுமானது. இன்னும் நாம் போதுமான முயற்சியைச் செய்திருக்கலாமே என்ற எண்ணத்தோடு மட்டும் இரவு தூங்கச் செல்லாதீர்கள். எல்லாராலும் பள்ளியில் 90 மதிப்பெண் எடுக்க முடியாது. போட்டிபோடும் உலகில் சராசரி மாணவனாக இருப்பதில் ஒன்றும் தவறில்லை.
நான் 12- ஆம் வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறாத சராசரி மாணவன். விளையாட்டு மற்றும் பிற இணைப் பாடத்தில் கூட தான் சராசரி மாணவனாக இருந்தேன். ஆனால் விமானம் மீது அலாதி காதல் கொண்டிருந்தேன். நான் ஒரு சராசரி மாணவன், எனக்கு எதுவும் வராது என என் மீது எனக்கே நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். விமான லெப்டினன்ட் ஆக பணியில் சேர்ந்த போதும் தான் தெரிந்தது, எதையும் முழு மனதுடன் செய்தால் வெற்றி பெற முடியும் என்று.
தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற மனநிலை மாறி, எதிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டேன். எனது வாழ்க்கை அனுபவம் மாணவர்கள் யாரையாவது ஒருவரை ஊக்கப்படுத்தினால், எனது நோக்கம் நிறைவேறிவிட்டது என அர்த்தம்" என்று தெரிவித்தார்.
வருண் சிங்கிற்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.