குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. விஜய் ரூபானி முதல்வராக இருந்துவந்தார். இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி விஜய் ரூபானி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ளும் விதமாக விஜய் ரூபானியை முதல்வர் பதவியிலிருந்து பாஜக நீக்கியதாக தகவல் வெளியானது.
விஜய் ரூபானி தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில், குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி அவர் குஜராத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து, இன்று (16.09.2021) குஜராத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. இந்தப் புதிய அமைச்சரவையில், விஜய் ரூபானி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்தப் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. குஜராத் மாநில ஆளுநர் மாளிகையிலும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தன. ஆனால், கடைசி நேரத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழா இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விஜய் ரூபானி அமைச்சரவையில் இருந்த மூத்த அமைச்சர்கள், தங்களது பதவி பறிக்கப்படுவதற்காக அதிருப்தியடைந்ததாகவும், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடைபெற்றதால், அமைச்சரவை பதவியேற்பு விழா இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் குஜராத் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.