தெலுங்கானா முதல்வரும் டிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர ராவிற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இதற்கு முன் பலமுறை தெலுங்கானாவிற்கு மோடி வந்த போதிலும் தெலுங்கானா முதல்வர் பிரதமரை நேரில் சென்று வரவேற்கவில்லை.
இது ஒருபுறம் இருக்க தெலுங்கானா பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு வாரிய மசோதாவை நிறைவேற்றுவதில் ஆளுநர் தாமதம் செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டது. எனினும் அது உண்மையல்ல என ஆளுநர் தமிழிசை திட்டவட்டமாக மறுத்தார். இந்த ஆட்கள் நியமனம் செய்யும் விசயத்தில் ஆளுநர் தமிழிசைக்கும் தெலுங்கானா அரசுக்கும் இடையே இருந்த விரிசல் மேலும் அதிகரித்தது.
இதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் டிஆர்எஸ் கட்சிக்கு இருக்கும் மோதல் போக்கின் நீட்சியாய் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எனது செல்போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது என பகிரங்கக் குற்றச்சாட்டினை முன் வைத்தார். இந்நிலையில் இன்று தெலுங்கானாவில் உள்ள ராமகுண்டத்தில் பத்ராச்சலம் சாத்துப்பள்ளி சாலையில் உள்ள உரம் மற்றும் ரசாயனத் தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, “பலரும் என்னிடம் வந்து நீங்கள் எவ்வாறு சோர்வடையாமல் உழைக்கிறீர்கள் எனக் கேட்கின்றனர். எனக்குச் சோர்வு ஏற்படுவதே இல்லை. தினமும் 2 முதல் 3 கிலோ திட்டுகள், தூற்றல்கள், அவதூறுகளை உணவாக உட்கொள்கிறேன்; ஜீரணிக்கிறேன். கடவுள் வழங்கிய அருளால் அவதூறுகள் என் உடம்பில் சத்துணவாக மாறிவிடுகிறது.
மோடியைத் தூற்றுங்கள், பாஜகவை தூற்றுங்கள். ஆனால், தெலங்கானா மக்களை அவதூறாகப் பேசினால் நீங்கள் அதற்கு மிகப் பெரிய விலை கொடுக்க நேரிடும். மக்கள் அதிகமான நம்பிக்கை வைத்திருந்த கட்சி துரோகம் செய்கிறது. ஆனால், நான்கு புறமும் இருள் சூழும்போது அங்கு தாமரை மலரத் தொடங்கும்” எனக் கூறினார்.