பீகார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். அப்போது ரயில்வே பணிநியமனத்தின் போது பீகாரில் நிலங்களை வாங்கிக் கொண்டு பலருக்கு பணிநியமனம் செய்ததாகக் கூறி லாலு பிராசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 15 ஆம் தேதிக்குள் அனைவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் நேற்று முன்தினம் லாலு பிரசாத்தின் மனைவியும் பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், நேற்று லாலு பிரசாத் யாதவிடமும் நேரில் விசாரணை நடத்தியது.
இது தொடர்பாக லாலு பிரசாத்தின் மகள் ரோகிணி தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்க அப்பாவை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறீர்கள். இது சரியல்ல. இதனால் அவருக்கு ஏதாவது நேர்ந்தால் நான் யாரையும் விட்டு வைக்க மாட்டேன். டெல்லி நாற்காலியை அசைப்போம். இதெல்லாம் நினைவில் இருக்கும். நேரம் சக்தி வாய்ந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ரோகிணி, தன் தந்தை லாலு பிரசாத் யாதவுக்கு தனது சிறுநீரகங்களில் ஒன்றை அளித்து புது வாழ்வு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.