இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வர பெண் தொழிலதிபர்களின் பட்டியலை கோடக் வெல்த் ஹுருன் வெளியிட்டுள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கியின் ஒரு பிரிவான கோடக் வெல்த் மேனேஜ்மென்ட் மற்றும் ஹுருன் இந்தியா இணைந்து இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வர பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2020 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி பெண்களின் நிகர சொத்துமதிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஹெச்.சி.எல் டெக்னாலஜியின் தலைவரான ரோஷினி இந்தியாவின் மிகப்பெரிய பெண் கோடீஸ்வரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு 54,850 கோடி ரூபாய் ஆகும்.
இவருக்கு அடுத்த இடத்தில், 36,600 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பயோகானின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிரண் மஜும்தார்-ஷா இடம்பெற்றுள்ளார். யு.எஸ்.வி பிரைவேட் லிமிடெட் தலைவர் லீனா காந்தி திவாரி 21,340 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த ராதா வேம்பு 11,590 கோடி சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் சோஹோ (zoho) நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை தன வசம் வைத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.