சாரதா சிட்பண்ட் மற்றும் ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்தவாரம் கொல்கத்தாவில் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் மேற்குவங்க காவல் துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்ட சிபிஐ அதிகாரிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிபிஐ செயல்பாடுகளை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானெர்ஜி 3 நாட்கள் தர்ணாவில் ஈடுபட்டார். இந்நிலையில் உச்சநீதிமன்றம், காவல் ஆணையரை விசாரிக்கலாம், ஆனால் கைது செய்யக்கூடாது மற்றும் கட்டாய வாக்குமூலம் வாங்க கூடாது என உத்தரவிட்டது. மேலும் ஷில்லாங் சிபிஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் ஆணையர் ராஜீவ் குமார் இன்று ஷில்லாங் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இன்று அவரிடம் சாரதா சிட்பண்ட் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.