
பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள்களை பணியாளர் ஒருவர் திருத்திக் கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம், பிபாரியா நகரில் ஷாஹீத் பகத் சிங் என்ற அரசு முதுகலைக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பணிபுரிந்து வரும் நான்காம் வகுப்பு ஊழியரான பன்னாலால் பதரியா, பேராசிரியர் குஷ்பூ பகரேவுக்கு பதிலாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்து திருத்திக் கொண்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் வெளியான இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கல்லூரி மாணவர்கள், இந்த விவகாரம் குறித்து உள்ளூர் எம்.எல்.ஏ தாக்கூர் தாஸ் நாகவன்ஷியிடம் புகார் அளித்தனர். இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மாநில உயர்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணைக் குழு, கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தனது அறிக்கையை சமர்பித்துள்ளது. அதில், பல அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக விருந்தினர் ஆசிரிய உறுப்பினரான குஷ்பூ பகரே, வேறு யாராவது விடைத்தாள்களை சரிபார்க்க ஏற்பாடு செய்வதற்காக பல்கலைக்கழக ஊழியரான ராகேஷ் மெஹருக்கு ரூ.7,000 பணம் கொடுத்துள்ளார். அதன்படி, கல்லூரி பணியாள் பன்னாலால் பதரியா அந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய அவருக்கு ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், விடைத்தாள்களைச் சரிபார்க்க லஞ்சம் கொடுத்த குஷ்பூ பகரே மீதும், பன்னாலால் பதரியா ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து மாநில உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், தேர்வு செயல்முறையை முறையாக மேற்பார்வையிடத் தவறியதற்காக பல்கலைக்கழகத்தின் பொறுப்பு முதல்வர் ராகேஷ் குமார் வர்மா மற்றும் பேராசிரியர் ராம்குலம் படேல் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.