
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போவதாக எழுந்த தொடர் புகாரின் அடிப்படையில் காட்பாடி காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த வகையில் காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளார். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று மேற்கொண்ட விசாரணையில் அவர் சென்னை அடுத்த திருநின்றவூரை சேர்ந்த கார்த்தி (34) என்பதும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகனத்திற்கு ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 34 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், கைதான கார்த்திகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
10 ம் வகுப்பு படித்துள்ள கார்த்தி தொடர் திருட்டில் ஈடுபட அடிக்கடி சென்னையில் இருந்து ரயில் மூலம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்து அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனங்களை திருடிக் கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.