
மும்பையில், கோவா செல்லக்கூடிய சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆர்யன் கானின் தரப்பில் பலமுறை ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜாமீன் மனு பலமுறை விசாரணைக்கு வந்த நிலையில் 21 நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 28ம் தேதி ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஜாமீன் பெற்ற ஆர்யன்கானுக்கு சில நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்தது. அதன்படி, ஆர்யன் கான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என்.சி.பி மும்பை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும், மும்பைக்கு வெளியே ஆர்யன்கான் பயணிக்க வேண்டும் என்றால் விசாரணை அதிகாரிகளிடம் பயணம் தொடர்பான விவரங்களை அளிக்கவேண்டும். என்.டி.எஸ்.பி அனுமதியின்றி ஆர்யன்கான் நாட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்திருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை தோறும் போதைப்பொருள் சிறப்பு அலுவலகத்தில் இனி ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளித்துள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பும் நேரத்தில் ஆஜரானால் போதுமானது என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.