கோவா மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்ற போதும், ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர் தலைமையில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் ராஜேஷ் பட்நேகரை சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் 10 பேரும் ஆளும் பாஜகவில் முதலமைச்சர் பிரமோத் சவாந்த் முன்னிலையில் இணைந்தனர்.
பாஜகவில் 10 எம்.எல்.ஏக்கள் இணைந்துள்ளால், 40 எம்.எல்.ஏக்கள் கொண்ட கோவா சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 27 ஆக அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், எந்த வித நிபந்தனையும் இன்றி அவர்கள் 10 பேரும் தங்களது கட்சியில் இணைந்திருப்பதாகவும் அவர் கூறினார். ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து, பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் கோவா மாநிலத்திலும், இது போன்ற நிகழ்வுகள் நடந்து வருவது என்பது காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.