Skip to main content

“எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்” - கார்கே பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Karke emotional speech at karnataka for lok sabha election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதில் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் அப்சல்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டாமணியை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால், கலபுர்கியில் தனக்கு இடமில்லை என்று அவர் கருதுவார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எனக்கு இங்கு இடமில்லை, உங்கள் இதயத்தை என்னால் வெல்ல முடியாது என்று நினைப்பேன். 

காங்கிரஸுக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காவிட்டாலும், என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வாருங்கள். தகனம் செய்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும் அல்லது புதைக்கப்பட்டால் மண்ணை வழங்கவும். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எம்.பி., அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகள் உங்களுக்குத் தெரியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி தோற்றால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்று கருதுகிறேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ, இல்லையோ, இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீட் தேர்வு முறைகேடு - நாடாளுமன்றத்தில் அமளி!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
NEET examination malpractice - Parliament adjourned

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதியதாக ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

NEET examination malpractice - Parliament adjourned

இத்தகைய சூழலில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை எம்பி சு. வெங்கடேசன் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்திருந்தார். அதே போன்று நீட், யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை அளித்தார். அதோடு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தார். மேலும் நீட் மற்றும் யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்திருந்தார்.

இந்நிலையில் மக்களவையில் அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிகள் கோரிக்கை வைத்தனர். இதனை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார். அப்போது ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சி எம்பிகளின் கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து, சபாநாயகருக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து நண்பகல் 12 மணி வரை மக்களவையை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். 

NEET examination malpractice - Parliament adjourned

முன்னதாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். அதற்கு ராகுல் காந்தி  நீட் தேர்வு தொடர்பான முறைகேடு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினார். இதே போன்று மாநிலங்களவையிலும் மல்லிகார்ஜுன கார்கே நீட் தேர்வு விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் எழுப்பி, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் கோரிக்கை வைத்தார். இதனால் மாநிலங்களவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story

அடுத்த 3 மணி நேரம்; 9 மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
For the next 3 hours; Alert for 9 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், சென்னை,  செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி தமிழகத்தின் நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்திய வானிலை ஆய்வு மையம் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அதீத கனமழை பொழிந்து வருகிறது. குடகு உட்பட ஐந்து மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின்  ஹசன் மாவட்டத்தில் இன்று கனமழைக்கான  மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் தட்சண கன்னடா மாவட்டத்தில் மூல்கி பகுதியில் 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.