புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் சரகத்தில் கடந்த மாதம் 9 ந் தேதி ஒரு மூதாட்டியை தாக்கி நகை பறித்துச் சென்றதாக வந்த புகாரையடுத்து சந்தேக நபராக கூறப்பட்ட ரவி மகன் பாண்டியன்(18) மற்றும் அவரது 17 வயது நண்பன் ஆகியோரை 10 ந் தேதி விசாரனைக்காக அழைத்துச் சென்று 16 ந் தேதி ஆலங்குடியில் கஞ்சா விற்றதாக 17 வயது சிறுவனை ஆலங்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் விடப்பட்டார்.
அதே போல 18 ந் தேதி கோட்டைப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழமஞ்சக்குடி கிராமம் கொள்ளுவயல் ஆற்றுப்பாலம் அருகே 1 கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் பைக்கில் வந்த போது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் முன்னிலையில் அவர்கள் சாட்சியாக பாண்டியனை கைது செய்தனர். மேலும், பைக் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த போது உடலில் காயங்களுடன் இருந்ததாக வாக்குமூலம் பதிவு செய்து மணமேல்குடி மருத்துவமனையில் காண்பித்து மருத்துவச் சான்று பெற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் போலீசார் தன்னை தாக்கியதால் படுகாயம் ஏற்பட்டு வலிக்கிறது என்று பாண்டியன் கதறியதால் உடனே புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு பாண்டியனின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால் டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பல நாட்கள் டயாலிசிஸ் செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்பகுதியில் உள்ள புண்களும் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாண்டியன் தரப்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் போலீசார் தாக்கியதில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு பாண்டியனுக்கு தனியார் மருத்துவமனையில் அரசு செலவில் உயர் சிகிச்சை அளிக்கவும், மாற்று விசாரணை கேட்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு வெள்ளிக்கிழமை(5.7.2024) விசாரணைக்கு வந்த நிலையில் பாண்டியனின் உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் பற்றிய மருத்துவ அறிக்கையை வரும் 10 ந் தேதி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், போலீசார் தரப்பில் கவுண்டர் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.