Skip to main content

“கலைஞரை யார் ஒருவரும் ரீப்ளேஸ் பண்ண முடியாது” - இந்து என்.ராம்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
hindu n ram interview about bjp and dmk

இந்தியாவில் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர், பல நாடுகளுக்கு பயணித்து பத்திரிகையாளராக பணிபுரிந்தவர். மூத்த பத்திரிகையாளர் என்.ராம் அவர்களை நக்கீரன் சிறப்பு பேட்டிக்காக சந்தித்தோம். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் குறித்தும் சம கால அரசியல் செயல்பாடுகள் குறித்தும் நம்முடைய கேள்விகளுக்கு தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது, இதற்கு இந்த அரசின் செயல்திட்டங்கள் சிறப்பாக இருந்தது காரணமா? அல்லது கூட்டணி அரசியல் யுக்தியா?

இரண்டும் தான் காரணம். குறிப்பாக பெண்களுக்கு உரிமைத்தொகை கொடுத்தது, கட்டணமில்லா பேருந்து, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், சமத்துவமாக, சகோதரத்துவமாக இருப்பதற்கான பலமுயற்சிகளை மாநில அரசு எடுத்துள்ளது. இந்தியா டுடே சர்வேயில் எல்லா மாநிலங்களுக்கும் முன் மாதிரியான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 

குறிப்பாக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பாக உள்ளது.  அதே சமயத்தில் சாதிய சிக்கல்கள் இன்னும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. தலித் மக்களை நசுக்கும் வேலைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அதெல்லாம் ஒரே இரவில் மாறி விடாது, ஆனால் ரிசர்வேசனால் ஏற்பட்ட வேலைவாய்ப்புகள் நிறைய மாற்றங்களையும் வளர்ச்சியையும் உண்டு பண்ணியுள்ளது. எல்லா சிக்கல்களுக்கும் தீர்வுகாண முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.  இந்த எலெக்சனில் திமுக பயப்படவே இல்லை. 

சரியாக திட்டமிடப்பட்ட யுக்தியான கூட்டணி. அத்தோடு 69,000 பூத் இருந்தது, அனைத்து பூத் எஜெண்ட்களுக்கு முறையான பயிற்சி அளித்திருந்தார்கள். முதலமைச்சர் நேரடிக் கண்காணிப்பில் குழு அமைத்து அதற்கென தலைவர்கள் போட்டு ரொம்ப சிஸ்டமேட்டிக்காக வேலை செய்தார்கள். இதைப்போல வேறு எந்த மாநிலத்திலும் செய்யவில்லை. திமுக கூட்டணி மற்றும் அதன் தலைவர்கள் சிறந்த ஒருங்கிணைப்போடு பணியாற்றினார்கள் அதனால் இந்த வெற்றி சாத்தியமானது. அத்தோடு அவங்களுக்கு(பாஜக) கலைஞர் கருணாநிதியை விட மு.க.ஸ்டாலின் டேஞ்சர் தான்.

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டிய அதிமுக, பாஜக உடன் கூட்டணி இல்லையென்று முடிவெடுத்தது, அவர்களுக்கு உதவி புரிந்ததா? அல்லது எதிராக செயல்பட்டதா? 

அதிமுக கட்சிக்குள் உள் முரண்கள் இருந்தாலும் அது தான் இங்கே எதிர்க்கட்சி. அதிமுக உடன் தான் பாமக கூட்டணி வைத்திருக்க வேண்டும். ஆனால் பாஜக அவர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்கள். ஜெயலலிதா மாதிரியான பவர்புல்லான ஆள் இறந்த பிறகு கூட இபிஎஸ் மீதியிருந்த நாட்களை திறம்பட ஆட்சி புரிந்தார் என்று தான் சொல்வேன்.

கொரோனா காலத்தை நன்றாகத்தான் கையாண்டார்கள். சட்டமன்ற தேர்தல் வந்த சமயத்தில் தான் கொரோனா கட்டுப்பாடு விசயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தாமல் போனார்களே தவிர மற்றபடி இபிஎஸ் திறமையான அரசியல்வாதி தான். அவங்க தான் எதிர்க்கட்சி. அதிமுக தலைமை மற்றும் அடுத்த கட்ட தலைவர்களும் பாஜக கூட்டணி வேண்டாமென்று உறுதியாக முடிவெடுத்தார்கள். பாஜக உடன் கூட்டணி வைத்தால் அவர்கள் நிறைய அட்வாண்டேஜ் எடுத்துக் கொண்டு இவர்களுக்கு சிக்கல் கொடுத்திருப்பார்கள். மற்ற மாநிலங்களில் இதைத்தான் பாஜக செய்திருக்கிறது. எனவே கூட்டணி வேண்டாம் என்று முடிவெடுத்தது நல்லது தான்.

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் எல்லாம் மீண்டும் இணைந்து பணியாற்றலாம் என்று இபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கிறார்களே?

ஓபிஎஸ்க்கு அவ்வளவு பலமெல்லாம் இல்லை. ஓபிஎஸ் பாஜக உடன் இணைந்து விட்டார் என்றே தான் சொல்ல வேண்டும். சசிகலாவைப் பற்றி சொல்வதற்கு சீரியசாக ஒன்றுமில்லை. தினகரன் பிஜேபி உடன் கூட்டணி வைக்க ஆரம்பிச்சுட்டார். இபிஎஸ்கிட்ட தான் பெரும்பான்மையான கட்சியே உள்ளது.

 அதிமுக உடன் கூட்டணி வைத்துக் கொள்ளாதது பாஜகவிற்கு பின்னடைவா?  

தமிழகத்தில் சில இடங்களில் இரண்டாவதாக கூட வந்திருக்கிறார்கள். ஆனால், மத்தியில் பலகீனமாகத்தான் பாஜக உள்ளது. மாநில அரசிற்கு அழுத்தம் தர மாட்டார்கள். அதனால் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக உடன் பாஜக கூட்டணி இருக்காது. அதிமுகவும் கூட்டணி வைத்துக் கொள்ளாது தான். கஷ்ட காலங்களில் சொந்தக்காலில் நிற்பது தான் சிறந்த யுக்தியாகும்.

இந்த தேர்தலில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தோற்றிருக்கிறார். விஜயகாந்த் இறப்பின் மீது மக்களுக்கு இன்னமும் எமோஷ்னலான தொடர்பு வைத்திருக்கிறார்களா அதை வைத்து வாக்களிப்பார்களா? 

விஜயகாந்த்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்திருக்கிறது, அதனால் சிம்பத்தியும் உருவாகியிருக்கிறது. அதை வைத்துத் தானே பிரேமலதாவும் என் மகனுக்காக விட்டுக் கொடுத்திருக்கலாமேன்னு பேசியிருக்கிறார். அது ஒரு வகை செண்டிமெண்ட் தான். அது தான் இவ்வளவு ஓட்டு வந்திருக்கிறது. ஆனால் அதை வைத்து வெற்றி என்பதெல்லாம் அதெல்லாம் அரசியலில் நடக்காது.

முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களோடும் நெருங்கி பழகியிருக்கிங்க, அவரது மகனான இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூடவும் நெருங்கி பழகிக்கிட்டு இருக்கிங்க இவர்களை எப்படி ஒப்பீடு செய்கிறீர்கள்? 

கலைஞரை விட ரொம்ப மென்மையானவராக இருக்கிறார் ஸ்டாலின், அதிகம் முன்னாடி பேச மாட்டார், பாயிண்டாக பேசுவார் இப்பவும் செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சரியாகவும் இருக்கிறார். இப்படி இருப்பது தான் இன்றைய கால அரசியலுக்கு சரியானது கலைஞர் ரொம்ப பவர்புல்லான லீடர், என்னை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் எங்களது உறவு நண்பர்களைப் போலத்தான் இருந்தது. பல துறைகள் சார்ந்து ரொம்ப விருப்பம் உள்ளவர். கிரிக்கெட்டில் கூட ரொம்ப ஆர்வமானவர், டெஸ்ட் மேட்ச் கூட பொறுமையாகப் பார்த்து கமென்டரி எல்லாம் சொல்வார். ஸ்டாலின் டி20 பார்க்கிறார். 

பொறுமையாக டெஸ்ட் கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறாரான்னு தெரியலை. கலைஞர் விடியற்காலையில் எழுந்து பத்திரிகையில் எழுதுவது, வாசிப்பது, விமர்சனத்திற்கு பதிலளிப்பது என்று ரொம்ப கமிட்மெண்டாக இருப்பார். எமர்ஜென்சி கால கட்டத்திலும் அவர் எழுதிய கருத்து சுதந்திரம் சார்ந்த விசயங்களைத்தான் அன்றைய அரசாங்கமே பார்த்துக் கொண்டிருந்தது. அதில் பல்வேறு வழக்குகள் கூட அவர் எழுத்திற்காக அவர் மீது இருந்தது. விடியற்காலையிலேயே அனைத்து பத்திரிகைகளையும் படித்து அதில் ஏதேனும் குறைகள் கூறியிருந்தால் உடனடியாக அது தொடர்பான அதிகாரிகளை தொடர்பு கொள்வார். பிரச்சனையை சரி செய்ய சொல்வார். அதெல்லாம் ஒரு சகாப்தம் தான்.  

திராவிட இயக்க தலைவர்களான பெரியார், அண்ணா மாதிரி எப்போதும் போராட்டம், பிரச்சாரம் என்ற நோக்கில் இல்லாமல் கலைஞர் வேறு மாதிரி இருந்தார். ஆனாலும் அண்ணா இறப்பிற்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் நடத்த வேண்டிய சூழலில், நிதி ஒரு சிக்கலாக இருந்த போது, அதை பெறுவது அதை பயன்படுத்துவது என்று பெரிய சவால்கள் அவரின் முன்னே இருந்தது. சில தோல்விகள் நடந்தாலும் மற்ற எல்லாவற்றையும் திறமையாக கையாண்டார். ஒரு சட்டமன்ற தேர்தலிலும் தோற்கவில்லை. தி கிரேட் லீடர் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  

மாநில அரசில் வெற்றி பெற்றதும் மத்திய அரசின் மீது ஆசை வரவில்லை மோடி போல, ஆனால் மத்தியில் ஆட்சி அமைப்பதில் கிங்க் மேக்கராகத்தான் இருந்தார். காங்கிரஸ் கட்சிக்குள் சிக்கல் வந்த போது இந்திராகாந்தியை ஆதரித்தார். அது இந்திய அளவில் கலைஞர் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தலைவராகத்தான் இருந்தார். அவரை யார் ஒருவரும் ரீப்ளேஸ் பண்ண முடியாது.

கலைஞரின் விடியற்காலை போன் கால்ஸ் அந்த காலங்களில் ரொம்ப பிரபலமாக பேசுவார்கள். உங்களுக்கு அப்படி வந்த கால்ஸ் பற்றி சொல்ல முடியுமா? 

நிறையா போன் கால்ஸ் கலைஞரிடமிருந்து விடியற்காலையில் எனக்கு வந்திருக்கிறது. குறிப்பாக இலங்கை பிரச்சனைகளைப் பற்றி, எல்லாவற்றையும் நான் வெளிப்படையாக வெளியே சொல்ல முடியாது எனெனில் அது பர்ஸ்னல் கான்வர்சேசன்ஸ், மதுரையில் நடந்த மோசமான சம்பவமான, பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட போது இந்து பத்திரிக்கையில் கோவமாக ரொம்ப கடுமையான ஒரு தலையங்கத்தை திமுகவை விமர்சித்து எழுதினோம். உடனடியாக அது தொடர்பாக பேசினார். என்ன இப்டி எழுதிட்டிங்களேன்னு கேட்டார். 

உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். நாங்கள் இப்படி எழுதிவிட்டோமே என்று இதை அவர் பகையாகப் பார்க்கவில்லை. எதிரியாகவும் அணுகவில்லை.  கலைஞருக்கு சீனியர் பத்திரிகையாளர்கள் நேரடியாகவே தொடர்பு கொள்ளலாம். உடனடியாக பதிலளிப்பார். கட்சி அலுவலகத்திற்கு போனால் பத்திரிகையாளர்களுக்கு சுவாரசியமாக பதிலளிப்பார். அது தான் மறுநாள் தலையங்கமாகவே இருக்கும். அப்படித்தான் எல்லா தலைவர்களும் இருக்க வேண்டும். இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கும் டிபரண்ட் ஸ்டைல் ஆஃப் ஒர்க் தான். அதனால் நேரம் ஒதுக்குவது கஷ்டம். ஆனாலும் உழைப்பு என்றால் ஸ்டாலின் என்பது இன்றும் உண்மை தான்.  

கலைஞர் காலத்தில் சமூக ஒருங்கிணைப்பு எப்படி இருந்தது? இப்போது எப்படி உள்ளது? 

கலைஞருக்கு மத நம்பிக்கை கிடையாது. ஆனால் மத நம்பிக்கையை மதிப்பார் கலைஞர். இந்து, கிறித்துவர், முஸ்லீம் என்று யாராக இருந்தாலும் பார்க்கும் போது மதிப்பளிப்பார். புட்டபர்த்தி சாய்பாபா கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் படம் ரொம்ப பிரபலம்.  இன்றைய காலத்தில் மதம் மாறி திருமணம் செய்பவர்களை எதிர்ப்பேன் என்று நினைக்கிற அரசாங்கம் தோல்வி தான் அடையும். ஆனால் திராவிடக் கட்சிகளும், இடதுசாரிகளும் பாரம்பரியமாக கலப்பு திருமணத்தை வரவேற்றார்கள். மற்ற மாநிலங்களைப் போல மதவெறி இங்கே தலைதூக்க முடியவில்லை. சாதி வெறி கொடுமைகள் நடப்பதை தடுக்க முடியவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டி உள்ளது. இடைநிலை சாதி மக்கள் தலித் மக்களை தாக்குகிறார்கள். 

விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் அதை முன்னெடுத்து தீர்வு காண முயல்கிறார்கள். ஆனால் அரசாங்கம் இன்னும் வீரியமாக அதை கவனத்தில் கொண்டு சரி செய்ய முயல வேண்டும். இந்த பிரச்சனையை தீவிரத்தன்மையோடு முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்தி தீர்க்க வேண்டும்.

இன்றைய கால பத்திரிகைகளில் நடப்பது பற்றியும், பத்திரிகையாளர்களைப் பற்றியும்?

இன்றைய காலத்தில் சவுக்கு சங்கர் மாதிரியான ஆட்களை நான் பத்திரிகையாளனாக கூட கருத மாட்டேன். அது போன்ற ஜர்னலிசம் வந்தால் அது அவமானமாகும். இப்போதெல்லாம் ஜர்னலிசத்திற்குள் மிரட்டல் போக்கு வந்திருக்கிறது. பணம் வாங்கிக்கொண்டு தான் சில விசயங்களைச் செய்கிறார்கள். அது தவறு, அது ஜர்னலிசம் அல்ல. தமிழக பாஜக தலைவர் மாதிரி பத்திரிகையாளர்களை கையாள்கிறப் போக்கும் மிகவும் கண்டிக்கத்தக்கது. 

குறிப்பாக பெண் பத்திரிகையாளர்களை மிக மோசமாக நடத்துகிறார். கேள்வி கேட்டால் அவர்களையே மிரட்டுவது மற்றும் அவமானப்படுத்துவது எல்லாம் நடக்கிறது. மேலும் ஆதரவாளர்களைக் கொண்டு சோசியல் மீடியாவில் உளவியல் ரீதியாக ஆபாசமாக நடத்துவது போன்றவற்றை செய்கிறார்கள். அதற்காக வழக்கு தொடுத்தால் சிறை செல்வதை பெரிய பிரச்சனையாக மாற்றுகிறார்கள். கவனமாக கையாள வேண்டியும் இருக்கிறது.