Skip to main content

ஆம்ஸ்ட்ராங் கொலை; 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
15-day court custody for 8 people in the Armstrong case

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இந்தக் கொலை வழக்கில், நேற்று இரவே(5.7.2024), பாலா, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேர் தாங்கள்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம் என்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதில் கடந்த ஆண்டு வெட்டி கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா என்பவர் தனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே, கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக  பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இந்த வழக்கில் மேலும் 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில், அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுச் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி நாளை சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். 

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் உடல் பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி கோரி மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடலை கட்சி அலுவலகத்தில் அடைக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதனை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதுவரை ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்த அதிகாரிகள், குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.  

இதனைத் தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதியளித்ததால் இன்றிரவே நீதிபதி அனிதா சுமந்த் வீட்டில் விசாரணை நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால்,  இந்த வழக்கு நாளை காலை 8.30 மணிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் தலைமையில் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களை எழுப்பூர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 8 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல்துறையினர் 8 பேரிடம் விசாரணை நடத்தி கொலைக்கான காரணம், பின்புலம் என்று முழு தகவலையும் பெற்று நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்