Skip to main content

ஆசிரியர்களே இல்லாத அரசுப்பள்ளிகள்; கூண்டோடு இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள்

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
All the teachers in government schools have been transferred

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி 1 வது வார்டு பகுதியான காசிம்புதுப்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் காசிம்புதுப்பேட்டை பகுதி மட்டுமின்றி அருகில் உள்ள பேட்டைக்காடு, கரம்பக்காடு இனாம், சுக்கிரன்குண்டு பகுதியைச் சேர்ந்த 111 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் 3 இடைநிலை ஆசிரியர்கள், 3 பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு 2 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் காலியானது. அதனால் அந்த காலிப்பணியிடங்களுக்கு 2 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் ஒரு பட்டதாரி ஆசிரியர் நிர்வாக காரணங்களால் மாற்றுப் பணியில் வேறு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் பள்ளி நிர்வாகத்திற்கும் பெற்றோர்கள் தரப்பிற்கும் சுமூகமான உறவு நீடிக்காத நிலை ஏற்பட்டதால் கடந்த வாரம் நடந்த கலந்தாய்வில் பள்ளி தலைமை ஆசிரியர் திருக்கட்டளை நடுநிலைப் பள்ளிக்கு இடமாறுதல் பெற்றுள்ளார்.

All the teachers in government schools have been transferred

அதே போல இன்று சனிக்கிழமை நடந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் ஒரு பட்டதாரி ஆசிரியர் கீழாத்தூர் நடுநிலைப் பள்ளிக்கும், மற்றொரு பட்டதாரி ஆசிரியரும், பள்ளியில் எஞ்சியிருந்த ஒரு இடைநிலை ஆசிரியரும் செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர். இதனால் அரசு ஆசிரியர்களே இல்லாத அரசுப்பள்ளியாக உள்ளது காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.

இந்த நிலையில் திங்கள் கிழமை யார் பள்ளியை திறந்து பாடம் நடத்துவார்கள் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஆனால் 2 தற்காலிக இடைநிலை ஆசிரியர்களும் மழலையர் வகுப்பில் ஒரு தற்காலிக ஆசிரியரும் உள்ளனர். ஒரு பள்ளியில் பணியாற்றிய ஒட்டு மொத்த ஆசிரியர்களும் ஒரே நேரத்தில் இடமாறுதலில் சென்று ஆசிரியர்கள் பணியிடம் காலியாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு உடனே ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்கின்றனர் பெற்றோர்கள்.

இதே போல, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், ஆயிங்குடி வடக்கு  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் காலிப்பணியிடங்களாக உள்ளது. பணிபுரிந்த ஒட்டு மொத்த ஆசிரியர்களும் பணிமாறுதல் பெற்று சென்றுவிட்டனர். ஒரே கல்வி மாவட்டத்தில் இரு நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத அரசுப்பள்ளிகள் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்